Thursday, October 18, 2007

கூரிய கருவியும், குரங்கும்.

மனித இனம் அல்லாத மற்றய உயிரினங்களுக்குள் குரங்கினம் மட்டுமே கருவிகளை கையாளும் வல்லமை உடையன. ஆழமாக புதைந்திருக்கும் கிழங்கு வகைகளை தோண்டி எடுப்பதற்கு கம்புகளையும், கடினமான கோதுகளை உடைய விதைகளை உடைப்பதற்கு கற்களையும் கருவியாக குரங்குகள் உபயோகிக்கின்றன. இதனை அறிந்த பிற்பாடு, ஆய்வு கூடத்தில் கத்தி போன்ற கூரிய ஆயுதம் அவைகளிடம் கொடுத்து ஆய்வு செய்திருக்கின்றார்கள் விலங்கியலளர்கள். ஆய்வின் விளைவு விபரீதமாகியிருந்தது. கத்தியை கையாளத்தெரியாமல் தன்னையும், கூண்டுக்குள்ளிருந்த இதர பிராணிகளையும் காயப்படுத்தியிருந்தன அவைகள். கல்லையும் கம்பையுமே கருவியாக கையாளும் முறைமட்டுமே குரங்குகள் அறியும். இதர கருவிளை பயன்படுத்தும் அளவுக்கு அவை பரிணாமம் அடையவில்லை.

குரங்குகளுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கு கூட இவ்வுதாரணம் பொருந்தவே செய்யும். தெரியாத, அல்லது பயிற்றப்படாத துறை ஒன்றை கையாள்கையில், அதுவும் சமுகம் சார்ந்த விடயமெனில் பக்கவிளைவுகள் பல ஆண்டுகளுக்கு இருக்கும். கட்டடம் கட்டுவதில் மட்டுமே வல்லவரான இஞ்சினியரை கொண்டு வந்து சமூகத்தை கட்டமைக்கச்சொன்னால் விளைவு என்னவாகும் என்பதை எமது மக்கள் பகுத்தாய்ந்து உணர முடியாத பேதமையானவர்கள். ரோராண்டோ தமிழ்ச்சூழலில், சமூகத்தை செப்பனிடக்கூடிய கருவிகள் சில உரியவர்களிடத்தில் இல்லாது இருக்கிறது. எவர்கையில் எவையெவை இருக்ககூடாதோ அவையாவும் அவர்களிடத்திலிருப்பதுவே தமிழர்களின் பொது விதியாகிப்போனது.

கடந்த மாதத்தில் ஒரு நாள் நண்பர்களிடம் உரையாடிவிட்டு வீடு திரும்பும்போது பொழுது பின்னிரவாகியிருந்தது. வாகனத்திலிருந்த அனைத்துப்பாடலும் கேட்டுத்தீர்ந்து போயிருந்ததால், தமிழர்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு, அரசியல,; தேசியம், வாழ்வியல் போன்ற இன்னோரன்ன அடையாளங்களை பிரதினுத்துவப்படுத்தும்; பண்பலை வானொலியை இயங்கவிட்டேன். அவ் அகாலப் பொழுதில் கலந்துரையாடல் பாணியில் ஆபாசமாக ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். உற்றுக்கவனித்தபோதுதான் விபரீதம் புரிந்தது.

நேயர்களின் பாலியல் சம்பந்தமான சந்தேகங்களுக்கு வானொலி நிலையத்தில் இருந்து விடை பகிரப்பட்டுக்கொண்ருந்தது.

பாலியல் சந்தேகங்களுக்கும், பிரச்சனைகளுக்கம் தீர்வுப்பொதி வழங்கிக்கொண்டிருப்பவர்கள் அத்துறையில் பாண்டித்தியம் பெற்றவர்களோ, உளவியலாளர்களோ, அன்றி மருத்துவரோ அல்ல. காய்கறி சந்தையில் கூவிக்கூவி விற்பனை செய்யமட்டுமே தெரிந்த இரு நபர்கள். நேயர்களின் பாலியல் சந்தேகங்களுக்கு ஆலோசனை சரியான முறையில் வழங்கப்படுகிறதா என கவனித்தபோது அருவருப்பான ஆபாச பேச்சே தொடர்ச்சியாக இடம்பெற்றுக்கொண்டிருந்தது. வெகு விரைவில் மக்களை சென்றடையக்கூடி வானொலி ஊடகத்தை இத்தனை தூரம் துஸ்பிரயோகம் செய்யப்படுவதை காண்கையில் பரிணாமம் அடையாத குரங்கின் கையில் கொடுக்கப்பட்ட கூரிய கருவியே அடையாளமாக தெரிகிறது.

ஆண் பெண், பெண் பெண், ஆண் ஆண் ஊடல் உறவுக் காட்சிகளையும் கூட்டுக்கலவியையும் விதம் விதமாகவும,; அதிநவீன உத்திகளையும் காட்டும் நீலப்படம் ஓடுவதற்கு முன்பு இப்படியொரு அறிப்பு வரும். “ இவை யாவும் பார்த்து ரசிக்கமட்டுமே. இங்கு காட்டப்படும் உத்திகள் எதனையும் முயன்று பார்க்க வேண்டாம். சில முறைகள் ஆபத்து நிறைந்தவை.”

நீலப்படம் எடுப்பவர்களுக்கு, சமூகம் மீதிருக்கும் அக்கறைகூட, எங்கள் பண்பலைக்காரருக்கு தமது மக்கள் மீதில்லாதிருக்கிறது. எந்தவிதமான முன் அறிவுப்பும் இல்லாமல் வருவதால் இவர்கள் வழங்குகின்ற ஆலோசனைகள் யாவும் உண்மைதான் என நம்புகின்ற தோற்றத்தை பொதுப்புத்தி மட்டத்தினருக்கு ஏற்படுத்திவிடும் என்பதில் எந்தச்சந்தேகமும் வேண்டியதில்லை.
ரேடியோவில் கதைக்கிறவங்கள் எல்லாம் சரியா அறிவாளியாத்தான் இருப்பார்;கள் என நம்கின்ற போக்கு நம்மவர்களுடையது.

ஓட்டப்பந்தையத்தில் முன்னுக்கு ஓடிக்ககொண்டிருப்வன்தான் முன்னோடியென பலவந்தமாக நம்பகைவக்கப்பட்டிருக்கிறார்கள் நமது மக்கள். கேள்வி கேட்கவும், மறுபரீசிலனை செய்யவும், சிந்திக்கவும் விருப்பப்படாத சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவதில் ரொரன்டோ தமிழ் ஊடகள் சில பெரு முயற்சியில் ஈடுபடுகின்றனவோ? என எனக்கெழும் சந்தேகம் வலுப்பெற்றுக்கொண்டே செல்கிறது.

No comments:

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது