நண்பர்களால் படுகொலை செய்யப்பட்டவர்களின் பட்டியலைப்போல், இனம் தெரியாதோரால் கொல்லப்பட்டவர்களின் பட்டியலும் ஈழப்போராட்டத்தில் பெரு நீளமானது. உணவில் நஞ்சு கலந்து உண்ணக் கொடுத்து கொலை செய்ததும், உறக்கத்தில் சுட்டுக் கொன்றதும், பேச வா, என அழைத்துச் சென்று பற்றைக்குள் கொலைசெய்து போட்டுவிட்டு சென்ற கொடூரமான நண்பர்களை கொண்டது எங்களது போராட்டப்பாதை. சாகப்போகிறவனுக்கு கூட தனது அடையாளத்தை காட்டக்கூடாது என முகமூடி அணிந்து கொலை செய்து சென்ற நண்பர்களைப்பற்றி யாராவது ஒருத்தரேனும் பதிவு செய்துதானே ஆகவேண்டும்.
நட்பு பற்றி பேசவும், அரசியல் நேர்மை பற்றி கதைக்கவும் யோக்கியம் அற்ற ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்னும் போதில், எனது எல்லா தமிழ் அடையாளங்களையும் அழித்து விட்டு, இன்னும் தொலைதூரம் சென்று விடலாமோ என்றிருக்கிறது.
இருநாட்களுக்கு முன்பு தேனி இணையத்தளம், இனம் தெரியாதோரால் எழுதப்பட்ட விமர்சனம் பாணியிலான ஏதோ ஒன்றை பிரசுரித்திருக்கிறது. சின்னத்தம்பியும், சவரித்தம்பவரும் சம்பாசிக்கின்றார்களாம். சரி என்னதான் சம்பாசிக்கின்றார்கள் என தலைநிரம்ப வலியுடன் படித்து முடித்தால் ஆயாசம்தான் ஏற்படுகிறது. தங்களை முற்போக்காளர்களாகவும், தலித் விடுதலையாளர்களாவும், பாசிசய எதிர்பாளர்களாகவும், பேசிக் கொள்பவர்களால் எழுதப்பட்ட யாவும், மூடக் கொள்கைகளையும் நம்பிக்கைகளையும் கடைப்பிடித்துக் கொண்டு, முகமூடியணிந்து நண்பனை கொன்று விட்டுச் செல்லும் தோழர்களையே ஞாபகப்படுத்துகிறது.
ஏழையின் சிரிப்பில் இறைவனைக்காணலாம் என்போரே, ஏழைகளை சிரிக்க விடாமல் செய்து கொண்டிருப்பது போல், தலித்தியம் பேசுவோரே சாதியத்தை வளத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒடுக்கப்பட்ட சமூகம் ஒன்றினை துவேசிப்பது, மனித உரிமை மீறல் என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாதவர்கள், புலிகளின் மனித உரிமை மீறல் பற்றி அதிகம் கவலைப்படுகிறார்கள். பேராசிரியர் சிவத்தம்பியும், புலிப்படையின் தலைவர் பிரபாகரனும் குறிப்பிட்ட சமூகத்தில் பிறந்தார்கள் என்பதற்காக பன்நெடுங்காலமாக ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகம் ஒன்றை விமசிப்பதுவும் அதனது சாதாரண செயல்கள் யாவற்றையும் உள்ளர்த்தத்துடன் பார்ப்பதுவும், சாதித்தடிப்பேயன்றி வேறல்ல.
சுயவிமர்சனம் செய்து கொள்ளும் மேம்பட்ட சமூகம் ஒன்றை உருவாக்குவதில் உற்சாகம் உடைய நான், சேரனும், செல்வமும், சிவத்தம்பியும், சிவசேகரமும், தாலியசும் விமர்சனத்துக் அப்பார்பட்டவர்கள் என்னும் கருத்தை கொண்டவனல்ல . எவரும் விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட கூடியவர்கள்தான். ஆனாலும் விமர்சகர் அதுக்கான தகுதி உடையோர்தானா என்பது எமது வலிமையான கேள்வியல்லவா? தேனியின் இனம்தெரியாத எழுத்தரால் விமர்சிக்கப்பட்ட இவர்கள் எவரும் ஆயுதங்களுடன் இருப்பவர்கள் அல்ல. பாடம் சொல்லிக் கொடுப்பவர்களும், புத்தகம் விற்பவர்களும்தான். இவர்களை விமர்சிப்பதற்கே முகமூடி போடும் இவர்கள்தான், புலிகளின் பாசிசத்தை எதிர்த்து போராடப் போகிறார்களாம்…! (போங்கடா டேய்)
புலிகளில் இருந்து, புளுகு ரேடியோக்காரன் வரை நான் விமர்சித்து இருக்கிறேன். சரி பிழைக்கப்பால் எனக்கு தோன்றிய எண்ணங்கள் யாவற்றையும் இரண்டாம் திருத்தம் இல்லாமல் எனது சொந்த அடையாளத்துடன் இடம் கிடைக்கும் இடம் எங்கும் எழுதியிருக்கிறேன். முகமூடியணிந்த முதுகெலும்பில்லாத மொட்டைச் சுவர் எழுத்தானர்களால் விமர்சிக்கப்படுவர்கள் பாதிக்கப்படுகின்றார்களோ என்னமோ, நான் உளரீதியாக உடைந்து போய் விடுகிறேன்.
இயல்பாய் வாழ்பவர்களையும், சித்தன் போக்கில் செல்போர்களையும் விமர்சிப்பதற்கு ஏன் கள்ளப்பெயர் பயன்படுத்தப்படுகிறது என துளாவினால் கிடைக்கும் பதில் சுவாரஸ்யமானது. புலிகளை பாஸிஸ்டு என்பவன் புலிகளின் நிறுவனம் ஒன்றில் சம்பளம் பெறுபவனாக இருக்கிறான். பக்கா யாவாரி என விமர்சிப்பவன் பல இலட்டம் முதலீட்டில் முதலாளியாக இருக்கின்றான். ஒழுக்கவியல் சொல்வன் பெண்களுக்கு எதிராய் துண்டு பிரசுரம் விட்டவனாக இருக்கிறான். மனித உரிமை பேசுபவன், இலங்கை அரசிடம் ஊதியம் பெறுபவனாக இருக்கிறான். இன்னும் இதில் வேடிக்கை என்னவென்றால் இம்முகமூடி விமர்சகர்கள் யாரை விமர்சிக்கின்றார்களோ அவர்களின் உதவியும் அனுசரணையும் ஏன்றேனும் தேவைப்படும் என்னும் எண்ணமே தங்கள் அடையாளங்களை மறைக்கின்றார்கள் என்பது அபத்தமான உண்மையாகவும் இருக்கிறது.
எது எப்படியாயினும் இவைபோன்ற பொறுப்பற்ற விமர்சனங்கள், நேர்மையற்ற அரசியல் சூழல் கொண்ட இக்காலத்தில் விபரீதத்தையே கொண்டு செல்லும். அடையாளம் தெரியாத எழுத்தாளரகள் போல்;, ஆயுததாரிகளும் எல்லா இடங்களிலும் இருக்கின்றார்கள். சுடுவது ஒன்னைத்தவிர வேறு எதுவுமே தெரியாத அவர்களுக்கு நாளுக்கு ஒரு எதிரி வேண்டும். இது போன்ற பொறுப்பற்ற ஆள்காட்டி விமர்சனங்கள் மிகவும் கண்டிக்கத்தக்கதும் நிறுத்தப்பட வேண்டியதும் ஆகும்.
தனிப்பட்ட காழ்ப்போ, அன்றி வேறு என்ன காரணமாக இருந்தாலும் அடையாளம் தெரியாதோரால் எழுதப்பட்டவைகளை ஏனோ இந்த இணையங்கள் போட்டுத்தொலைக்கின்றனவோ தெரியாது. எழுதுவன்தான் மூளையை அவிழ்து பெயர்தெரியாத மர பொந்துக்குள் வைத்துவிட்டான் என்றால், போடுகிறவனும் எங்கே அவிழ்த்து வைத்தானோ புத்தியை.
Tuesday, October 23, 2007
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment